சென்னை: இந்திய விமானப் படையின் ஏ.என்-32 விமானம் (பதிவு கே-2743) 2016 ஜூலை 22 அன்று வங்காள விரிகுடாவில் ஓ.பி பணியின் போது காணாமல் போனது. இந்த விமானத்தில், 29 பணியாளர்கள் இருந்தனர். விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்றாலும் காணாமல் போன பணியாளர்களையோ அல்லது விமான பாகங்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், சமீபத்தில் காணாமல் போன ஏ.என்-32 கடைசியாகத் தென்பட்ட இடம் என அறியப்பட்ட இடத்தில் ஆழ்கடல் ஆய்வு திறன் கொண்ட ஒரு தன்னாட்சி வாகனம் (ஏ.யு.வி) நீருக்கு அடியில் நிறுத்தப்பட்டது. மல்டி பீம் சோனார் (சவுண்ட் நேவிகேஷன் மற்றும் ரேங்கிங்) உட்படப் பல பேலோட்களைப் பயன்படுத்தி 3400 மீட்டர் ஆழத்தில் செயற்கை துளை சோனார் மற்றும் உயர் தெளிவுத்திறன் புகைப்படம் எடுத்தல் முறையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேடல் படங்களைப் பகுப்பாய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 140 கடல் மைல் (சுமார் 310 கி.மீ) தொலைவில் கடல் படுகையில் விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பது தெரியவந்தது.