சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று (அக்.8) பிற்பகல் 2 மணிக்குச் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
மேலும், 1983 மற்றும் 2011-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்த 2023 உலகக் கோப்பைக்கும் களமிறங்கி இருக்கிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணியுடன் சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (அக்.8) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி இருக்கிறது. போட்டியை காண வெளிமாநிலங்களில் இருந்து ரசிகர்கள் அனைவரும் சென்னைக்குப் படை எடுத்துள்ள நிலையில் சென்னையே விழாக்கோலமாக இருந்து வருகிறது.
விண்ணை மூட்டும் 'இந்தியா' கோஷம்: இந்த போட்டிக்காகக் காலை முதலே ரசிகர்களின் படை, சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி வருகை தந்தது. அங்கு கூடிய ரசிகர்களின், விசில் சத்தமும் "இந்தியா.. இந்தியா.." என்ற கோஷமும் விண்ணை முட்டியது. மேலும் முகத்தில் இந்தியக் கொடி ஓவியத்தை வரைந்து, தேசியக் கொடியைக் கையில் ஏந்தியும் வருகை தந்தனர். மேலும் ரசிகர்கள் நீண்ட நேரம் கழித்து மதியம் 12.30 மணி அளவில் அனைவரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ரசிகர்கள் தெரிவிக்கையில், "இந்த உலகக் கோப்பை போட்டிக்காக காலை முதலே காத்துக் கொண்டிருக்கிறோம், மேலும் இந்த போட்டியில், இந்தியா வெல்ல வேண்டும் என்றும் விராத் கோலி சதம் அடிக்க வேண்டும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்" என்று தெரிவித்தனர்.