சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய சார்பில் 30 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இந்திய வம்சாவளியான அம்மா மற்றும் மகன் ஹாங்காங் அணிக்காக ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று உள்ளனர். இந்தியப் பெண் சிகப்பி மற்றும் அவரது மகன் தண்ணீர்மலை தற்போது ஹாங்காங்கிற்கான ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிகப்பியின் கணவர் பி.ஆர்.கண்ணப்பன் ஹாங்காங் செஸ் கூட்டமைப்பின் பொருளாளராக உள்ளார்.
இந்த நிலையில் இன்றைய போட்டி முடிந்தவுடன் குடும்பத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய சிகப்பி, "பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை தான். எட்டு வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். 2005 குடும்பத்துடன் ஹாங்காங் சென்றுவிட்டேன். 2006 முதல் அங்கு விளையாட தொடங்கினேன். அங்கு பெண்கள் அணி என தனியாக இல்லை, 2016 ஆம் ஆண்டு பெண்கள் அணி உருவாக்கினோம்.
நம்ம ஊரில் விளையாடுவது பெருமையாக உள்ளது. ஹாங்காங் - கில் கரோனா காரணமாக அதிகளவில் கட்டுப்பாடு உள்ளது. மீண்டும் ஹாங்காங் சென்றாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீட்டிற்கு செல்ல முடியும். இந்தியாவிற்கு வர வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை இருந்தது. ஆனால் இதுபோன்று விளையாட வரவேண்டும் என்று இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகவும் அருமையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.