எனக்கு இருக்கை எங்கே.? கடுப்பான ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர்.! சென்னை:ஒடிசாவில் 2023 ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹாக்கி கோப்பை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஹாக்கி கோப்பை இன்று காலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்றுக்கொண்டார். பின்னர், அதனை தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஹாக்கி கோப்பையை வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
அங்கு, மேடையில் வைக்கப்பட்டிருந்த இருக்கை வரிசையில், முதல் வரிசையில் விளையாட்டுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சென்னை மேயர் பிரியா போன்றவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் ஓய்வுபெற்ற ஹாக்கி வீரர்களுக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரருமான வாசுதேவன் பாஸ்கரன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, “இது என்ன கட்சி நிகழ்ச்சியா? இல்ல விருது வழங்கும் விழாவா?, முன்னாள் ஹாக்கி வீரர்களுக்கு பின் வரிசையிலா இருக்கை போடுவீங்க?” என கேள்விகள் எழுப்பினார்.
இதனால் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீண்ட சலசலப்புக்கு பிறகு, வாசுதேவன் பாஸ்கரன் உள்பட 4 ஹாக்கி வீரர்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டது. 1980-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாஸ்கரன் கேப்டனாக இருந்தவர் என்பது கூட தெரியாமல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் விவரம் அறிந்தவர்கள் எனத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஃபிஃபா உலக கோப்பை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு