சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் நேற்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4 கோல்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7வது ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. கடைசி லீக் போட்டி என்பதாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்பதாலும், இந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் கடுமையாக மோதின. முதல் 15 நிமிட நேரத்தில் கடைசி நிமிடமான 15வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் ஆக்கினார். தொடர்ந்து 23வது நிமிடத்தில் இந்திய அணிக்கு மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதையும் அவரே பயன்படுத்தி கோல் ஆக்கினார். இதனால், இந்திய அணி 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையும் படிங்க:2023 ஒருநாள் உலகக்கோப்பை:18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா!
தொடர்ந்து 3வது பகுதியின் 36வது நிமிடத்தில் பெனால்ட் கார்னர் வாய்ப்பு மூலம் ஜர்ராஜ் சிங் கோல் அடித்தார். இதன் தொடர்ச்சியாக, 4வது பகுதியின் 55வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் நான்காவது கோல் பெற்று தந்தார். இதன் மூலம் இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால், மூன்று முறை ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டியில் வென்ற பாகிஸ்தான் வெளியேறியது. இந்த லீக் போட்டியில் 4 வெற்றி, 1 சமன் என்ற கணக்கில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.
முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வென்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இன்றைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் மலேசியா, தென்கொரியா அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியா வெற்றி பெற்றது. இன்றோடு லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
முதல் அரையிறுதியில் மலேசியா - தென் கொரியா, 2வது அரையிறுதியில் இந்தியா - ஜப்பான் அணிகளும் மோதவுள்ளன. மேலும், அரையிறுதி மற்றும் 5வது இடத்திற்கான பாகிஸ்தான் - சீனா இடையேயான போட்டிகள் நாளை (ஆகஸ்ட்11) நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:IND vs WI: சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம்.. குல்தீப் யாதவ் சாதனை.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!