சென்னை: இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று ( ஆகஸ்ட் 15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பாக சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் சாலையிலிருந்து போக்குவரத்து காவல்துறையினரின் இரு சக்கர வாகன அணிவகுப்போடு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தென்னிந்திய பகுதிகளின் தலைமை படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் திங்ரா, தாம்பரம் வான்படை நிலைய அதிகாரி ஏர் கமாண்டர் ரித்தீஷ் குமார், கிழக்கு மண்டல கடலோர காவல் படை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆனந்த் பிரகாஷ் படோலா, தமிழக காவல்துறை ஐஜி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் ஏ.அருண் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
பின் முதலமைச்சரை அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து முதலமைச்சர் காவல்துறையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு திறந்த ஜீப்பில் நின்று அணிவகுப்பை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளம் வந்து தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அந்நேரம் காவல்துறையின் கூட்டுக்குழல் இசை குழுவின் மூலம் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் தகைசால் விருதை கி.வீரமணிக்கும், அப்துல் கலாம் விருதை, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக கணிணித்துறை பேராசிரியர் டபிள்யு.பி வசந்தா கந்தசாமிக்கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நா. முத்துச்செல்விக்கும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சரின் நல்ஆளுமை விருதுகளை முதலமைச்சர், காலை உணவு திட்ட கண்காணிப்பு செல்லிட செயலியை உருவாக்கியதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கும், ஆதரவற்ற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டதற்காக சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜனுக்கும், கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றவாளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாரயணனுக்கும் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதை சென்னையை சேர்ந்த டாக்டர் த.ஜெயக்குமாருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சாந்தி நிலையத்திற்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தன் வித்யாசாகருக்கும், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்தியதற்காக மதுரையை சேர்ந்த டெடி எக்ஸ்போர்ட்டுக்கும், மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க உதவியாக கடன் வழங்கிய இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் வழங்கினார்.
பின் முதலமைச்சர் ஸ்டாலின், ராணுவ காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார். அதனை தொடர்ந்து மகளிர் நலனுக்காக பணியாற்றிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனத்துக்கும், சிறந்த சமூக சேவகரான கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த டி. ஸ்டான்லி பீட்டருக்கும் சமூக நலத்திற்கான மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருதை வழங்கினார்.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளில் சென்னை மாநகராட்சியின் 9வது மண்டலத்திற்கு முதல் பரிசும், 5வது மண்டலத்திற்கு 2வது பரிசும் வழங்கினார். சிறந்த மாநகராட்சிகளில் முதல் பரிசு திருச்சிராப்பள்ளிக்கும் 2வது பரிசு தாம்பரத்திற்கும் வழங்கினார். சிறந்த நகராட்சிகளில் முதல் பரிசை ராமேஸ்வரத்திற்கும், இரண்டாம் பரிசை திருத்துறைபூண்டிக்கும், முன்றாம் பரிசை மன்னார்குடிக்கும், சிறந்த பேருராட்சிகளில் முதல் பரிசை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கும், இரண்டாம் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கும், மூன்றாம் பரிசை சேலம் மாவட்டம் வீரக்கல்புதூருக்கும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை ஆண்கள் பிரிவில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சி.தஸ்தகீர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரா.தினேஷ் குமார், ராணிப்பேட்டை மாவட்டம் கோ.கோபி, செங்கல்பட்டு மாவட்டம் ப.இராஜசேகர் ஆகியோருக்கும் பெண்கள் பிரிவில் சென்னை மாவட்டம் மு.விஜய லட்சுமி, மதுரை மாவட்டம் சந்திரலேகா, காஞ்சிபுரம் மாவட்டம் தா.கவிதா தாந்தோணி ஆகியோருக்கு வழங்கினார்.
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கத்தை முன்னாள் காவல்துறை தெற்கு மண்டல தலைவர் அஸ்ரா கார்க், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாரயணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே உமேஷ் பிரவீன், கோயம்புத்தூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் மா.குணசேகரன், நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சு. முருகன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முதல்நிலை காவலர் ஆர்.குமார் ஆகியோருக்கு வழங்கினார்.
இறுதியாக முதலமைச்சர் ஆளுநர் நுழைவாயில் முகப்பு அருகில் தகைசால் விருது பெற்ற கி.வீரமணியுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய முதலமைச்சர் அதனை தொடர்ந்து விருதாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதையும் படிங்க:இந்து சமய அறநிலையத்துறையின் ரூ.80.56 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு முதலமச்சர் அடிக்கல்!