சென்னை: 'சம வேலைக்கு' 'சம ஊதியம்' வேண்டும் என்பதை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
அவர்களின், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'சம வேலைக்கு' 'சம ஊதியம்' வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தொடர்ந்து காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவைச் சந்தித்து இடைநிலை பதிவு மூப்பு சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், எந்த வித சமரச முடிவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
கடந்த முறை, போராட்டம் நடத்திய போது ஏராளமான ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னரும் மீண்டும் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும் போது, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311ல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு' 'சம ஊதியம்' வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
1.6.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, 1.6.2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்றும் 'ஒரே பணி' 'ஒரே கல்வித் தகுதி' என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதைக் களையக்கோரிக் கடந்த 10 ஆண்டுகளாக, எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு' 'சம ஊதியம்' வழங்கப்படும் எனக் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.