தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு? - ராமேஸ்வரத்தில் கூடும் தமிழ் அகதிகள்

இலங்கைத்தீலிருந்து தப்பி ராமேஸ்வரம் தீவுக்கு படையெடுக்கும் ஈழத்தமிழ் அகதிகளால் மீண்டும் வரலாறு திரும்புகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு..?
அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு..?

By

Published : Mar 23, 2022, 11:11 PM IST

ராமேஸ்வரம்:இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் பன்னூறாண்டு தொப்புள் கொடி வரலாறு உண்டு. இலங்கைத் தீவின் பூர்வ குடிகளாய் தமிழர்களே இருந்துள்ளனர் என்பதை சிங்களர்களின் மகாவம்சமே கூறுகிறது. இன்றைக்கும் தமிழ்நாடு மற்றும் இலங்கை வரைபடத்தை உற்றுநோக்கினால், கடல் நடுவே இழையோடும் அந்தக் கோடு இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் பூர்வீகத்திற்கான நிலவியல் சான்றாக இருப்பதை உணர முடியும்.

இலங்கைத் தீவை பொருளாதார, அரசியல், பண்பாட்டு ரீதியில் பல்வேறு முகங்களோடு வளர்த்தெடுத்த பெருமை தமிழர்களுக்கு உண்டு. இதன் காரணமாகவே இலங்கையின் நிர்வாகத்தில் தமிழர்களின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆங்கிலேயர்களின் மேலாதிக்கம் நிகழ்ந்த காலம் வரை இந்த சூழல் நீடித்திருந்தது.

அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு..?

சிங்களர்களால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள்

ஒருகட்டத்திற்குப் பிறகு பெரும்பான்மைச் சிங்களர்களால் தமிழர்கள் மிகப் பெரும் ஒடுக்குமுறைகளுக்கு ஆளானார்கள். மேலும், தமிழர்கள் மீதான சிங்களர்களின் எரிச்சல் பல்வேறு சமயங்களில் இனக்கலவரத்திற்கு வித்திட்டது. ஒவ்வொரு இனக்கலவரத்தின்போதும் தமிழர்களின் உடமைகள் அழித்தொழிக்கப்பட்டன. மேலும், படுகொலைகளும் சர்வசாதாரணமாக நிகழத் தொடங்கின.

1915, 1958, 1977ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் இலங்கையின் வரலாறாக இருந்தபோதிலும் கடந்த 1983-ஆம் ஆண்டு ஜெயவர்த்தனே அதிபராக இருந்த காலத்தில் நடைபெற்ற ஜூலைக் கலவரம் தமிழர்களின் வாழ்வில் கருந்துயரமாய் அமைந்துபோனதுதான் ஆகப்பெரும் கேடு.

அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு..?

இந்த சமயம்தான் அலை அலையாய் ஈழத் தமிழர்கள் உயிர் பிழைக்க தமிழ்நாடு நோக்கி வரத் தொடங்கினர். அதற்குப் பிறகு ஈழப்போர் நடைபெற்ற உச்சகட்ட ஆண்டான கடந்த 2009- இலும் அகதிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக ஈழத் தமிழர்களுக்கு அடைக்கலம் தருவதற்காகவே 119 இடைத்தங்கல் முகாம்கள் உருவாக்கப்பட்டன. சற்றேறக்குறைய தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலும் வசித்து வருகின்றனர்.

கடுமையான பஞ்சத்தில் இலங்கை

இதுவரை இனக்கலவரம், போர்ச்சூழல் காரணமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், தற்போது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகவும், பஞ்சத்தின் பொருட்டும் ராமேஸ்வரம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கையின் பொருளாதாரம் மிக நலிவடைந்திருந்த நிலையில், தற்போது மேலும் அதலபாதாளத்தை நோக்கி பொருளாதாரம் செல்லத் தொடங்கியுள்ளது. இலங்கையில் வாழும் சிங்களர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அலைகடலில் மிதந்து வரும் தமிழீழ அகதிகள் - மீண்டும் திரும்புகிறதா வரலாறு..?

இலங்கையின் நிர்வாகத்தில் அமர்ந்துள்ள ராஜபக்சே சகோதரர்களின் நிர்வாகத் திறன் இன்மையே தற்போதைய பொருளாதார சீரழிவுக்கு காரணம் என ஒரு தரப்பாரும், ஊழல் நிறைந்த ஆட்சியும் மற்றொரு காரணம் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை தற்போது நிதி வேண்டி கையேந்தி நிற்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்திய அரசு இலங்கைக்கு தற்போது ரூ.7 ஆயிரத்து 500 கோடியை நிதியாக வழங்கியுள்ளது.

உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் காரணமாக கடந்த மார்ச் 17-ஆம் தேதி இலங்கை முழுவதும் பொதுமக்கள் போராட்டம் வெடித்தது. ஒரு கிலோ அரிசி ரூ.250, பருப்பு ரூ.350, கோழிக்கறி ரூ.1000, முட்டை ஒன்றுக்கு ரூ.35 என காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விலையும் மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் கடுமையான பஞ்சநிலை உருவாகியுள்ளதாக இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாறு மீண்டும் திரும்புகிறதா..?

இதற்கிடையே, ராமேஸ்வரம் அருகேயுள்ள அரிச்சல்முனைப் பகுதியில் நேற்று(மார்ச் 22) மட்டும் 16 பேர் அடைக்கலம் தேடி அகதிகளாக வருகை தந்துள்ளனர். பட்டினிச்சாவுக்குப் பயந்து சுமார் 37 மணி நேரம் உயிருக்குப் போராடி தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இலங்கையின் மன்னார் மாவட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து வவுனியாவைச் சேர்ந்த 10 பேரும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 6 பேரும் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர். தனுஷ்கோடி எல்லையிலுள்ள 4-ஆம் மணல் திட்டில் இலங்கை படகோட்டிகளால் இறக்கி விடப்பட்ட இவர்களை இந்திய கடலோர காவல்படை கைது செய்து அழைத்து வந்தது.

மேலும், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதிகளாக தமிழ்நாட்டை நோக்கி வர முயற்சிப்பதாகவும், எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அவர்கள் வர இயலாமல் தவிப்பதாகவும் தற்போது அகதிகளாக வந்தவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்தியக் கடலோர காவல்படை, சர்வதேச கடல் பகுதிகளில் பலத்த கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.

இதுவரை இனக்கலவரம், போர்ச்சூழல் காரணமாக உயிர் பிழைக்க ஓடி வந்த ஈழத் தமிழர்கள், தற்போது இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள பசி பட்டினிக்கு அஞ்சி தங்கள் குழந்தைகளோடு வரத் தொடங்கியுள்ளனர். வங்கக்கடல், ஈழத்தமிழ் அகதிகளின் உயிர்ப்போராட்ட வரலாற்றைச் சுமந்து வலி மிகுந்த நெடுங்கடலாகவே இன்றும் இருந்து வருகிறது என்பதற்கு அகதிகளின் தற்போதைய வருகையும் சான்றாக அமைந்துள்ளது. வரலாறு மீண்டும் திரும்புகிறதா..?

இதையும் படிங்க:ஜெயலலிதா மரணம்: 'எது உண்மையோ அதனை திரையிட்டு மறைக்க முடியாது' - சசிகலா

ABOUT THE AUTHOR

...view details