சென்னை:கரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது கரோனா வைரஸ் பெருமளவு குறைந்து தமிழ்நாடு முழுவதும் சகஜ நிலை மீண்டும் திரும்பிவிட்டதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடுவதில் தமிழ்நாடு மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை வரும் 24ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டமும் இருப்பதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. மேலும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன.
இதை அடுத்து வெளியூர் செல்லும் பயணிகள் விமான நிலையத்தை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர். இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் குறிப்பாக தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு நாள் ஒன்றுக்கு வருகை, புறப்பாடு என 10-12 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது 14 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தூத்துக்குடிக்கு வருகை புறப்பாடு விமானங்கள் 6-ல் இருந்து 8ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.