சென்னை :சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமானம் முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ஏப்ரல் 8ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்த புதிய முனையம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத, ஒரு நவீன முனையமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய, தமிழ்நாட்டு கலாசாரம், புரதான நினைவுச் சின்னங்கள், பிரசித்திபெற்ற கோயில்கள், போன்ற ஓவியங்களுடன், கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். இனிமேல் 30 மில்லியன் பயணிகள், பயணிப்பதற்கான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன், பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. ஆனால் விமானங்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தபோது சில பிரச்னைகள் கண்டறியப்பட்டன. அதன்பின்பு அவைகளை சரி செய்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது.
இதனையடுத்து மே மாதம் இறுதிக்குள் சோதனை ஓட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிடும், அதன் பின்பு ஜூன் முதல் வாரத்திலிருந்து விமானங்களும் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த ஜூன் மாதம் 13ஆம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸின் அனைத்து சர்வதேச விமானங்களும், இந்த புதிய முனையத்தில் வருகை, புறப்பாடுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அடுத்தபடியாக வங்கதேசம் தலைநகர் டாக்காவுக்கு இயக்கப்படும் யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு இயக்கப்படும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவைகளும் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து சர்வதேச விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல் 2 எனப்படும் (டி 2) முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கியுள்ளது.
இதனால் சிங்கப்பூர், மலேசியா,துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இயக்கப்படும் சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் மொத்தம் 36 சர்வதேச விமான சேவைகள் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இன்று அதிகாலையில் இருந்து இயங்கத் தொடங்கியுள்ளன.
பெரிய ரக விமானங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ் ஏர்லைன்ஸ், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ், எத்தியாட் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பெரிய ரக விமானங்கள், அடுத்த சில தினங்களில், புதிய முனையத்தில் இருந்து இயங்கத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க :16 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்களுடன் முடிவுற்ற ‘கோடை விழா-2023’