சென்னை: சட்டப்பேரவையில் செய்தித் துறை மானியக்கோரிக்கையின் போது பத்திரிகை துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், நிருபர்கள், போட்டோகிராபர்கள், பிழை திருத்துநர்கள் பணிகாலத்தின் போது இயற்கை எய்திட நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் மு.பெ சாமிநாதன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு இன்று (நவ.15) வெளியிட்டுள்ளது.
அதில், "முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவித்தொகை பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று செய்தி துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்திரிகையாளர் ஓய்வுதியப் பரிசீலனைக்குழு விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்கும். திட்டத்திற்கான செலவினம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இந்தத் திட்டம் உடனே அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் தேர்வு வேண்டும் - மாணவர்கள் போர்க்கொடி!