அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார்.
லண்டன் பயணத்தின் மூலம் மருத்துவ சுற்றுலா அதிகரிக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: லண்டன் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் லண்டனில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் கையெழுத்திட உள்ளதாக தெரிவித்தார். லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் உருவாக்குவது, உலகத் தரத்திலான சேவைகளை தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வழங்குவது,
பல்வேறு துறைகளில் தரமான மருத்துவ சேவைகளை வழங்குவது உள்ளிட்ட நோக்கத்திற்காக மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் சிறந்த சேவையை வழங்கி வரும் நிலையில், சுகாதார சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் லண்டனில் உள்ள 999 என்று சொல்லக்கூடிய அதிநவீன ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலா இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.