இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும், ஆட்சியில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் செயலாற்றி வருகிறது.
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 234 நபர்களின் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 134 பேர், அதாவது 60 விழுக்காடு எம்எல்ஏக்கள் குற்றப் பின்னணி உள்ளது என தங்களது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு வெற்றி பெற்றவர்களிடையே 34 விழுக்காடு பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் இருந்த நிலையில், நடப்பு எம்எல்ஏக்களில் இது கணிசமாக அதிகரிப்பதைக் காண முடிகிறது.
குறிப்பாக, நடப்பு எம்எல்ஏக்களில் 52 பேர், அதாவது 25 விழுக்காடு பெண்களுக்கு எதிரான குற்றம், கொலை, ஆள் கடத்தல் போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக உள்ளனர். திமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களிடேயே 96 பேர் மீதும், அதிமுக எம்எல்ஏக்களில் வெற்றி பெற்ற 66 நபர்களில் 15 பேர் மீதும் குற்றப் பின்னணி உள்ளது.
234 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் மத்தியில் 192 பேர், அதாவது 86 விழுக்காடு கோடீஸ்வரர்களாக உள்ளனர். 2016ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இது 76 விழுக்காடாக இருந்தது. நடப்பு எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 12.27 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த தேர்தலில் இது 8.21 கோடி ரூபாயாக இருந்தது. மீண்டும் தேர்வு செய்யப்பட்ட 77 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு 44 விழுக்காடாக உயர்ந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.