சென்னை சைதாப்பேட்டையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 386 நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் புதிய திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (மே 28) தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது என்பது உண்மை தான். அந்த மாவட்டத்தில் இருக்கின்ற அதிகமான தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாளர்கள், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் ஆகியோர்களை கண்காணிப்பு செய்வதில் பெரும் சிக்கல் இருக்கிறது.
இருந்தபோதிலும், தற்போது அந்த மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, “சென்னையில் படுக்கை தட்டுபாடு என்ற நிலையே தற்போது இல்லை. சுமார் 8 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. வீட்டு தனிமையிலுள்ள நபர்களையும் கரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து வரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.