சென்னை:பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் யானைக்கால் நோயாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இன்று (ஜூன் 1) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகைக்கான சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், மருத்துவத்துறையில் பணியாற்றி பணியின் போது உயிரிழந்த வாரிசுகள் 20 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி ஆணையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு அன்றாட பணிகளை செய்ய முடியாமல் நான்காம் நிலையில் இருக்கும் 8,023 பேருக்கு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
யானைக்கால் நோய் விழிப்புணர்வு: இதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மாதந்தோறும் ரூ.9,62,76,000 செலவிடப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கி 12 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு தண்ணீரில் கலந்து தினசரி சுத்தம் செய்யவேண்டும். அப்படி செய்தால், குணமடைய வாய்ப்பு இருக்கிறது. யானைக்கால் நோய் தொற்று இல்லை.
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கடித்த கொசு மற்றவர்களை கடித்தால் நோய் பரவும். இதுகுறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுகாதார அலுவலர்கள், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிப்பார்கள். அதற்கேற்றார்போல் அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படும்.
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு கால் பெரியதாக இருப்பவர்களுக்கு, முதற்கட்டமாக 2 பேருக்கு தசை குறைப்பு அறுவை சிகிச்சை செய்வோம். அது வெற்றி பெற்றபிறகு, மீதமுள்ள 8,000 பேருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக, தசை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.