தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை- ரூ.200 கோடி வரி ஏய்ப்பு - rs 200 crore tax evasion

திரைப்பட பைனான்சியர் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 200 கோடி ரூபாய் வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat வருமான வரி சோதனை
Etv Bharat வருமான வரி சோதனை

By

Published : Aug 6, 2022, 4:46 PM IST

சென்னை:பிரபல திரைப்பட பைனான்சியர் அன்பு செழியன், கலைப்புலி எஸ்.தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர். பிரபு, தியாகராஜன் உள்ளிட்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள், பைனான்சியர் மற்றும் சில திரைப்பட வினியோகஸ்தர்கள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, மதுரை, வேலூர் மற்றும் கோவையில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. கடந்த 2ஆம் தேதி முதல் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரகசிய மற்றும் மறைவான இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் காட்டப்படாத பணப்பரிவர்த்தனை மற்றும் முதலீடு தொடர்பான பல்வேறு முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக திரைப்பட பைனான்சியர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத கடன் தொகை தொடர்பான உறுதிப் பத்திரங்கள் சிக்கியதாகவும், அதன் மூலம் பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் தொடர்பு தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் சமர்பிக்கப்பட்ட வருமான கணக்கு வழக்குகளைத் தாண்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதை உறுதிபடுத்தும் வகையிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கணக்கில் காட்டப்படாத வருமானத்தை, கணக்கில் காட்டப்படாத முதலீடுகளில் ஈடுபடுத்தியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு தொடர்புடைய வருமான வரித்துறை சோதனையில் திரையரங்குகள் மூலம் வரும் வருமானத்தை மறைத்து கணக்கு காட்டியது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த ஆவணங்கள் மூலம் விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒரு சிண்டிகேட்டை உருவாக்கி திரையரங்கு வருமானங்களை மறைத்துக்காட்டி உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாள்கள் நடைபெற்ற இச்சோதனையில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டப்படாத 26 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:கொத்தனார் வெட்டிக் கொலை...! உறவினர்கள் சாலை மறியல்...!

ABOUT THE AUTHOR

...view details