சென்னை:திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, கல்வி குழுமங்கள், மருத்துவமனைகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள், மதுபான ஆலைகள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த ஐந்தாவது நாளாக இன்று (அக்.09) அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அதிரடி சோதனையில், எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை கணக்கீடு செய்து, அதன் அடிப்படையில் இரண்டு வருமான வரித்துறை துணை ஆணையர் தலைமையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன் நடத்திவரும் 12 நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு தொடர்புடைய மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும், சீரிடப்பட்ட கவரில் கொண்டு வந்து அதனை அடையாறு இல்லத்தில் வைத்து இரண்டு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.