சென்னை: சென்னையில் உள்ள சில மாவட்டங்களில் மின்சாரத்துறைக்கு பொருட்கள் சப்ளை செய்ததில் முகவர்கள், இடைத்தரகர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவர்களுக்கு தொடர்புடைய சுமார் 40 இடங்களில் இன்று (செப்.20) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு மின்வாரியம் நிர்வகிக்கக்கூடிய அனல் மின் நிலையங்களில், நிலக்கரியை கையாளுவதற்கு தேவைப்படும் கன்வேயர் பெல்ட் கேபிள்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. இந்த கன்வேயர் பெல்ட் மற்றும் கேபிள் வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்று ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்கின்ற நிறுவனம். இந்த நிறுவனம் பொன்னேரி அருகே செயல்பட்டு வருகிறது.
மேலும் இதன் கார்ப்பரேட் அலுவலகம் சென்னை ஜாபர்கான் பேட்டரியில், சந்தகிரி தெருவில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த அலுவலகத்தில் தற்போது பத்திற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். மேலும் அந்த அலுவலகத்தின் மேல் தளத்தில் அதன் உரிமையாளர் வீடும் உள்ளதால், அங்கும் ஐந்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, அந்த பகுதிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு, அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும், இந்த நிறுவனமானது வடசென்னையில் இயங்கக் கூடிய அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை கையாளுவதற்கு கன்வேயர் பெல்ட் வழங்கக்கூடிய முகவராக கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து டெண்டர்களை மின்வாரியத்தில் இருந்து எடுத்து வருவதும் தெரியவந்துள்ளது.