சென்னை:தமிழகம் முழுவதும் நிதிப் பரிவர்த்தனை அறிக்கை முறையாக கணக்கு காட்டாத விவகாரத்தில் பத்தாயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். முறையாக கணக்குக் காட்டாத வங்கிகள், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவைகளில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மிகப்பெரிய அளவில் வருமான வரி ஏய்ப்பு செய்த தனி நபர் முதல் நிறுவனங்கள் வரை கண்காணித்து வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையும், விசாரணையும் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்புடைய முதலீட்டில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு வங்கி, வணிக வங்கி, சார் பதிவாளர்கள் அலுவலகம் உள்ளிட்டவைகளும் வருமான வரித்துறைக்கு (SFD) நிதிப் பரிவர்த்தனை அறிக்கை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பிக்காதவர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி, சோதனை நடத்துவதற்கான அதிகாரம் வருமான வரித்துறைக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அவ்வாறாக நிதிப் பரிவர்த்தனை அறிக்கை ஆய்வு செய்வதில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் வழக்குகள் குவிந்து உள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்த நிதிப் பரிவர்த்தனை அறிக்கையை 18 விதமான பிரிவுகளின்கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிலையில் கூட்டுறவு வங்கி, சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவைகளில் பலர் உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர்.