சென்னை: இந்தியா முழுவதும் பொதுமக்கள் முதலீடு தொடர்புடைய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிதி பரிவர்த்தனை அறிக்கையை வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்து வருகிறது. இந்த நிதி பரிவர்த்தனை அறிக்கை முறையாக காட்டப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது வருமான வரித்துறை கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் பொதுமக்களின் தனிநபர் வருமான வரி அறிக்கையை ஒப்பிட்டு பார்த்து, முறையாக கணக்கு காட்டுகிறதா என கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இந்த நிறுவனங்களில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொள்வதற்கு வருமான வரித்துறைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை சோதனை செய்து வருகிறது. ஏற்கனவே அறந்தாங்கியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி 13.5 கோடி ரூபாய் அளவில் முறையாக கணக்கு காட்டவில்லை என கண்டுபிடித்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளரான ஆதி மோகன் தலைவராக செயல்படும் கூட்டுறவு வங்கியில் இந்த சோதனையை வருமான வரித்துறை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 27ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
1921ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மெர்க்கன்டைல் வங்கி இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த மெர்கண்டைல் வங்கியில் கடந்த ஐந்து வருடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்தபோது பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், முறையாக கணக்கு காட்டப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக டைம் டெபாசிட், டிவிடெண்ட் பண்ட் மக்களுக்கு கொடுக்கப்படும் வட்டி ஆகியவற்றை முறையாக காட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அதேபோல், கிரெடிட் கார்டு தொடர்பான பரிவர்த்தனைகளில் கணக்கு காட்டாமல் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநரான கிருஷ்ணன் சுப்பிரமணியனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஒரு நாள் முழுவதும் சோதனை நடத்தப்பட்டதில் பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கணக்கு காட்டப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களில் கணக்குகளை ஆய்வு செய்தபோது நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
ரொக்க முதலீட்டில் பத்தாயிரம் வங்கி கணக்குகளில் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் தொகையும், கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு காட்டுதலில் 110 கோடி ரூபாயும், டிவைடெண்ட் முதலீட்டில் 200 கோடியும் மற்றும் பங்குகளில் 600 கோடியும், பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வட்டிகளில் 500 கோடி ரூபாயும் கணக்கு காட்டப்படவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பரிவர்த்தனை தொடர்பான கணக்குகளிலும் முறையாக கணக்கு காட்டப்படவில்லை என்பதை சோதனையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். மொத்தமாக 4 ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவில் நிதிப் பரிவர்த்தனை அறிக்கை உள்ளிட்ட விவகாரங்களில் கணக்கு காட்டப்படாதது தெரிய வந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை, வங்கி நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இது போன்று அடுத்தடுத்து முறைகேடாக நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்த பல்வேறு நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடரும் என வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.28 ஆயிரத்தை உடனே கட்ட வேண்டும்... - நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை!