தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் ஏன்? - நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல்! - வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை

actor vijay: நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது ஏன் என வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 9:13 PM IST

சென்னை: கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தது. அதன்படி, புலி படத்திற்குப் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தைக் கணக்கில் காட்டவில்லை எனக் கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துக் கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், கால தாமதமாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது, வருமானவரித்துறை சார்பில் அபராதம் ஏன் விதிக்கப்பட்டது என்பதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சென்னையில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி: யார் யாரெல்லம் முன்பதிவு செய்யலாம்?

ABOUT THE AUTHOR

...view details