விஜய்யின் பிகில் படத்திற்கு நிதியளித்த பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் குழுமத்திற்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களிலிருந்து 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நேற்று முதல் 20 இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கல்பாத்தி அகோரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பிகில் படத்தில் பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது. இதனால் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம், நேற்று வருமானவரித் துறையினர் நேரில் சென்று சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். இதன் பின் விஜய்யை அவரின் பனையூர் வீட்டில் வைத்தும் விசாரித்தனர். பின் விஜய்யின் மனைவியான சங்கீதாவிடமும் வருமான வரித்துறையினர் வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது.