சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டமன்றத்தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் யார் யாருக்கு இத்தொகை வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளுக்கான தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதற்கிடையில் இத்திட்டத்திற்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கான மேலாண் இயக்குநராக உள்ளார். மகளிர் உரிமைத் தொகை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க:இட ஒதுக்கீடு முறைகேடை கல்லூரி ஒப்புக்கொள்ளாவிட்டால் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் - எச்சரித்த உயர்நீதிமன்றம்
மேலும் உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலாளர் கார்த்தி உயர் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மா கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண் இணை இயக்குநராக விஷ்ணு மகாஜன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரீஷ் தக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆனந்த் மோகன், சென்னை மாநகராட்சி (வருவாய்-நிதி) துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராகவும் கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வாக்குப் பெட்டிகள் - திருச்சியில் ஆய்வு செய்த சத்யபிரதா சாஹூ