தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோட்டக்கலை பயிர்சாகுபடியை வளர்த்தெடுக்க ஊக்கத்தொகை திட்டம் - தமிழ்நாடு அரசு - ஊக்கத்தொகை திட்டம் அறிமுகம்

சென்னை: தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

tn govt
tn govt

By

Published : Jul 21, 2020, 8:34 AM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில், தோட்டக்கலைப் பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழவகைப் பயிர்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாலும், வழக்கமான பயிர்களிலிருந்து நல்ல லாபம் ஈட்டும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு விவசாயிகள் மாறி சாகுபடி மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மனிதனின் ஆரோக்கியத்திற்கு ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 100 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப, உயர்ந்து வரும் காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவையினைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விதி எண் 110-ன்கீழ் ஆண்டு முழுவதும் காய்கறிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், முக்கிய தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் அனைத்து முக்கிய காய்கறிகள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக இடைப்பருவ காலத்தில் காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், எக்டேருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற, வழக்கமாக சாகுபடி செய்யும் பருவம் தவிர்த்து, பற்றாக்குறை ஏற்படும் பருவங்களில் அறுவடைக்கு வரும் வகையில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை, நடவுச் செடிகளின் விலை பட்டியல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், மின் அடங்கலின் நகல் மற்றும் சாகுபடி மேற்கொண்ட வயலின் புகைப்படம் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம்.

ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில், அதிகபட்சமாக 2 எக்டேர் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். தோட்டக்கலைத் துறையின் பிற திட்டங்களின் கீழ், மானியம் பெறாத விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர் ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மானிய உதவி கிடைப்பதற்கான பருவம், பயிர் மற்றும் இதர விவரங்களைப் பெற தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேலூர் சிறையில் நளினி தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details