வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்குத் தேவையான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் பயில பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள டாவோ மருத்துவப் பள்ளி அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்படும் இந்தப் பயிற்சி பள்ளியை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், நடிகரும் இயக்குநருமான எஸ்.வி. சேகர் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
டாவோ அறக்கட்டளையில் தற்போது 5,000 மாணவர்கள் படிக்கின்றனர். சுமார் 2,800 மாணவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளனர். இதில் பல மாணவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றிவருகின்றனர்.
இதுகுறித்து டாவோ தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் டேவிட் கே பிள்ளை பேசுகையில், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறாத, அதிகம் ஆங்கிலம் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சிறந்த வெப்பமண்டல சூழலைக்கொண்ட பிலிப்பைன்ஸில் உள்ள மிகச்சிறந்த மருத்துவப் பள்ளிகளில் டாவோ மருத்துவப் பள்ளி அறக்கட்டளையும் ஒன்றாகும். இங்கு பல நாடுகளில் உள்ள நோய்களைக் குறித்து மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
இன்டர்நேஷனல் ப்ரீ மெட் இணையதள வகுப்புகள் மாணவர்களால் மிகவும் வரவேற்கத்தக்கவையாக மாறியுள்ளன. இந்தக் கடினமான கரோனா தொற்று பரவல் காலத்தில் மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் தளமாக இது இருக்கும்.