சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று (ஜூலை 1) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று 40 ஆக்ஸிஜன் படுக்கைகள், 100 சாதாரண படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டை திறந்துவைத்தார்.
தொடர்ந்து 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி, பொதுமக்களுக்கான கழிவறைகளையும் திறந்துவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், "முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் ஏற்கனவே ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 140 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் கரோனா சிகிச்சைக்காக 80 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படுக்கை வசதிகளை ஆறு மாதத்திற்கு அப்படியே வைத்திருக்க உள்ளோம்.