தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. சுமார் 6000 நோயாளிகளுக்கு மேல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனைகளில் போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. தமிழ்நாட்டில் நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் கிட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 11ஆம் தேதி வரையில், 2,54,899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு நாட்களில் பரிசோதனை எண்ணிக்கையும், மக்கள் நல்வாழ்வுத்துறை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படாதவர்கள் அரசின் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கவைக்கப்பட்டு உணவு மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.
மேலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை தேவைப்படும் அவர்களைத் தவிர மற்றவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சைப் பெறலாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்கனவே அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தும் மையங்களிலேயே புறநோயாளிகள் பிரிவினை நாளை முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, கல்லூரிகளில் தனிமைப்படுத்த அவர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களை அங்குப் பணியில் அமர்த்தி அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளவும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோர்களை மட்டுமே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், மக்கள் நல்வாழ்வுத்துறை ஆலோசனை வழங்கவுள்ளது.