தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால், சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது" - அமைச்சர் கே.என்.நேரு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், கடந்த ஆண்டைக் காட்டிலும் நீர் இருப்பு அதிகம் இருப்பதால், கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

summer
summer

By

Published : Mar 1, 2023, 5:35 PM IST

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் பகுப்பாய்வுக் கூடத்தில், ரத்த மாதிரிகள் பரிசோதனை, ஈசிஜி, ஸ்கேன், சளி மற்றும் சிறுநீரக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுப்பாய்வு கூடத்தில், முழு உடல் பரிசோதனை மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(மார்ச்.1) திறந்து வைத்தார். மேலும், 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான 5 டயாலிசிஸ் இயந்திரங்கள், புதிய இருக்கைகள், புதிய அறைகள் ஆகியவற்றை அமைச்சர் நேரு மற்றும் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, பொது மருத்துவமனைகளுக்கு நிகராக சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படுவதாகத் தெரிவித்தார். அப்போது, சென்னையில் சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், சென்னையில் எந்த இடத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கின்றது என்று குறிப்பிட்டுச் சொன்னால், 10 நிமிடங்களில் அங்கு தண்ணீரை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ரெட்டேரி உட்பட அனைத்து ஏரிகளிலும், கடந்த ஆண்டு இருந்ததைக் காட்டிலும் கூடுதலாக தண்ணீர் இருப்பு உள்ளது. அதனால் இந்த ஆண்டு கோடையில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது. சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் 15 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தற்போது நாள் ஒன்றுக்கு 240 மில்லியன் கன லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் கொண்டு வரப்படும் வழியில் 2 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கப்பட்டால், நாள் ஒன்றுக்கு 550 மில்லியன் கன லிட்டர் அளவுக்கு செம்பரம்பாக்கத்திலிருந்து சென்னை மாநகருக்கு குடிநீர் பெற முடியும். இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் பேசி வருகிறோம்.

நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது முனையத்திலிருந்து, அடுத்த இரண்டு மாதங்களில் 150 மில்லியன் கன லிட்டர் அளவிற்கு குடிநீர் பெறப்படும். சென்னையில் மழை நீர் வடிகால் பணி உரிய நிதிகளைப் பெற்று தொடர்ந்து நடைபெறும்.

கொசு ஒழிப்புப் பணிக்காக சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் இரு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொசுமருந்து தெளிக்கும் பணிக்காக ட்ரோன் உள்ளிட்ட புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் கொசு ஒழிப்பிற்கு கைகொடுத்துள்ளன" என்று கூறினார்.

இதையும் படிங்க: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details