சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்கவே கூடாது என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும் போது,"ஓபிஎஸ் என்ன தென் மண்டலத் தலைவரா? ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை. போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும். ஓபிஎஸ் பக்கம் போனவர்களை கட்சியில் சேர்க்கக் கூடாது. அவர்கள் இடத்திற்கு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்" எனக் கூறினார்.
மேலும், பாஜகவுடனான கூட்டணி குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் எனவும்; வரும் ஜன. 4ஆம் தேதி வரக்கூடிய பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு, அது போன்ற முடிவினை எடுத்துக் கொள்ளலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திமுக அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களின் மூலம் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும், தற்போது இருந்தே நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை தொடங்குவது தொடர்பாகவும் ஆலோசனை செய்துள்ளனர்.
வரும் ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை செய்துள்ளனர். இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் போன்ற தென் மாவட்டத் தலைவர்கள் குரல் எழுப்பி உள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மேயர் குழந்தைக்கு "திராவிட அரசன்" எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர்