இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் 34 அரசு பரிசோதனை மையங்கள், 11 தனியார் பரிசோதனை மையங்களில் இன்று வரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 748 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,323 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 761 நபர்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 1,664 நபர்களின் சளி மாதிரிகள் ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டுவருகின்றன. 9 ஆயிரத்து 30 பேருக்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 1,258 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1,035 நபர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்காவலில் 31,375 நபர்களும், தனிமைப்படுத்தும் மையத்தில் 40 நபர்களும் உள்ளனர்.
கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் இன்று 161 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பூரண குணமடைந்த 48 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய் தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 1,978 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கரோனா பரிசோதனையில் வெளியிட்ட அறிவிப்பின்படி அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து பேரும், சென்னை மாவட்டத்தில் 138 பேரும், கடலூர் மாவட்டத்தில் ஒருவரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று பேரும், மதுரை மாவட்டத்தில் ஐந்து பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவரும், சேலம் மாவட்டத்தில் ஒருவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் என 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.