சென்னை:கடந்த ஏப்ரல் மாதம் ’விஜய்’ நடிப்பில் வெளிவந்த ’பீஸ்ட்’ திரைப்படத்தை அம்பத்தூரில் உள்ள திரையரங்கிற்கு பார்க்கச்சென்ற அம்பத்தூர் அன்னை சத்யா நகரைச்சேர்ந்த இளைஞர்கள் மற்றும் எம்.கே.பி நகரைச்சேர்ந்த இளைஞர்கள் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் காரணமாக மே மாதம் எம்.கே.பி நகரைச்சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞரை அம்பத்தூர் உதவி ஆணையர் அலுவலகம் அருகில் ஒரு தொழிற்சாலை வாசலில் வைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக அன்னை சத்யா நகரைச்சேர்ந்த 16 வயதான சிறுவன் சண்முகம் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்து, பின் அவர்கள் வெளிவந்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக அன்னை சத்யா நகரைச்சேர்ந்த சண்முகத்தின் அண்ணன் கார்த்திக்கை கொலை செய்வதற்கு வெகு நாட்களாக எம்.கே.பி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் உட்பட அவருடைய நண்பர்கள் திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
பழிக்குப்பழி தீர்ப்பதற்காக காத்திருந்து வேலைக்குச்செல்லாமல் வீட்டிலேயே இருந்த அன்னை சத்யா நகரைச்சேர்ந்த சண்முகத்தின் அண்ணன் கார்த்திக்கை நோட்டமிட்டு, பட்டப்பகலில் சுமார் ஒரு மணி அளவில் அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த கார்த்திக்கை, நான்கு பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் துரத்தி வந்து, சரமாரியாக தலை, கை, கால், வயிறு உள்ளிட்டப்பகுதிகளில் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.