தருமபுரி:எட்டு தேர்வு மையங்களில் 5,437 மாணவ மாணவிகள் மருத்துவ நீட் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். காலை முதலே மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்கு முன்பு குவிந்தனர். சரியாக 11:30 மணி முதல் மாணவர்களுக்குத் தேர்வு நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டவாறு சோதனைக்குப் பிறகு, தோ்வு மையத்திற்கு உள்ளே அனுமதித்தனர்.
எஸ்.வி.ரோடு சாலையில் உள்ள இரண்டு தேர்வு மையங்களில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு எழுத இரண்டு மாணவர்கள் டீசர்ட், முக்கால் பேண்ட் (இரவு அணியும் உடை) அணிந்து நீட் தேர்வு எழுத வந்தனர். அவர்களை சோதனை செய்த அதிகாரிகள் முழு பேண்ட் போட்டு வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் தேர்வு மையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மாணவர்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதனை செய்து, வெள்ளி அரைஞாண் கயிறு இருக்கிறதா என்ற சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். மாணவிகள் காதில் உள்ள தோடுகளை கழற்றி, பெற்றோரிடம் கொடுத்து விட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.