சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில், ‘பணி நிரவல் கலந்தாய்வில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பின்னர் பணி நிரவல் நடத்திட வேண்டும். அனைத்து உயர் நிலைப் பள்ளிகளிலும் 150க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும் குறைந்தபட்சம் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டுகளில் 8 பட்டதாரி ஆசிரியர்கள் இருந்த நிலையில் 5 பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகளை நடத்துவது மிகுந்த சிரமத்திற்கு உரியது. பணி நிரவலுக்கு முன்பாக 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 7 பணியிடங்கள் வழங்கிட வேண்டும். அதன்பின்னரே பணி நிரவல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை வகுப்புகளில் போதிய பாடவேளைகள் இல்லாவிட்டால் அந்தப் பள்ளியில் முதுகலை ஆசிரியர் தான் உபரியாக கணக்கிடப்பட வேண்டும்.
ஆனால் இந்த நடைமுறையை தவிர்த்து முதுகலை ஆசிரியர்களை 9,10 ஆம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க அனுமதிக்கப்படுவதால், அந்தப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக மாற்றப்படுகின்றனர். இதனால் பல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகவும், சில பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களே இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது பணி விதிகளுக்கு முற்றிலும் முரணானது. முதுகலை ஆசிரியர்கள் கீழ் நிலை வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு பின்னர் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களைத் திரும்ப நடத்துவதற்கு முடியாமல் போகிறது. எனவே 9, 10ஆம் வகுப்புகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உபரி பணியிட மாறுதல் நடைபெற்றது. அப்போது கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்ற பள்ளிகளுக்கு கூடுதல் தேவைப் பணியிடங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையாத நிலையிலும் 2 முதல் 6 பட்டதாரி ஆசிரியர்கள் உபரிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, இவர்களை பணி நிரவல் செய்வதை கை விட வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்தினால் சுமார் 600 முதல் 900 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எனவே, பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திய பிறகு பணிநிரவல் கலந்தாய்வினை நடத்த வேண்டும். பணி நிரவல் கலந்தாய்வின் போது ஆசிரியர்கள் வெகுத் தொலைவிற்கு செல்வதைக் கருத்தில் கொண்டு அவர்கள் விருப்பப்பட்டால் அதே பள்ளியில் பணியாற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும்’ என அதில் கூறி உள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமாரின் பதவிக்காலம் நீட்டிப்பு - ஆளுநர் உத்தரவு