தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! விதிமீறல்களைக் கண்டறிய மேலும் ஒரு ரேடார் வாகனம்! - One more vehicle added

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை ரேடார் ரோந்து வாகனங்கள் மூலம் கண்டறிந்து போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் வட சென்னை பகுதிக்கு ஒரு ரேடார் வாகனம் வாங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

tn police
கோப்புபடம்

By

Published : Jun 15, 2023, 5:40 PM IST

சென்னை:போக்குவரத்து காவல்துறை பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் போக்குவரத்து வீதி மீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையில் கடந்த 12 நாட்களில் போக்குவரத்துறையினர் ரேடார் கருவியுடன் கூடிய அதிநவீன ரோந்து வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக 3948 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.

தென்னிந்தியாவில் முதன்முறையாக ரோந்து வாகனங்களில் இருந்தே ஏ.என்.பி.ஆர் கேமரா மூலமாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு உடனடி அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்த ரோந்து வாகனங்களில் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மற்றும் 2d ரேடார் பொருத்தப்பட்டு, சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படுகின்றன.

செலான் போடும் மாடர்ன் இண்டர்செப்டார் வாகனங்களும் வாங்கப்பட்டது. இதனை கடந்த மே மாதம் 31 ஆம் தேதி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இந்த ரேடார் வாகனம் 360 டிகிரி சுழலக்கூடிய அதிநவீன கேமராவை கொண்டுள்ளது.

இந்த வாகனம், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, டிரிபிள்ஸ் ரைடிங், வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்துவது மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை படம்பிடிக்கிறது.

இந்த கேமராக்கள் 2டி ரேடார் அமைப்புடன் இணைக்கப்பட்டு உள்ளன. வாகன ஓட்டிகளின் விதிமீறல்கள் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் சரிபார்த்த பிறகு அபராதத்திற்கான ரசீது உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் விதிகளை மீறுவோருக்கு உடனடியாக ரசீது அனுப்பப்படுகிறது.

இந்த நவீன ரேடார் ரோந்து வாகனங்கள் மூலம், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் நகரும் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய முடியும். இதுபோன்ற வாகனங்கள் தென் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த அதி நவீன வாகனம் மூலமாக கடந்த மே 31 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 3948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தலைக்கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்கியதாக 396 வழக்குகளும், வாகனத்தில் தலை கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக 154 வழக்குகளும், செல்போன் பேசிய படி வாகனத்தை ஓட்டியதாக 1 வழக்கும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 1003 வழக்குகளும், அதிவேக பயணம் செய்ததாக 2394 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த அதி நவீன வாகனம் வெற்றி அடைந்ததால் மேலும் ஒரு வாகனம் வாங்கப்பட்டு வடசென்னையில் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா.. இது என்ன புது ரூட்டா இருக்கு..! பிளிப்கார்ட்டுக்கே அல்வா கொடுத்த பெண்!

ABOUT THE AUTHOR

...view details