சென்னை நகரில் கரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கரோனா பரவலை தடுக்க சென்னையில் மாநகராட்சி, சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, காவல் துறை என அனைவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையினர் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சென்று கரோனா பாதித்தவரை அழைத்து வருவது, ஊரடங்கு மீறுபவர்கள் மீது நடவடிக்கை என பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. இதில் சென்னை காவல் துறையில் முதலில் கரொனா உறுதி செய்யப்பட்ட எஸ்பிளனேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கோயம்பேடு சந்தையில் பாதுகாப்பிலிருந்த காவலர்கள் முதல் கொண்டு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.