சென்னை: திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா வளாகத்தின் முன்பு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு என J6 திருவான்மியூர் காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும் போராட்டம் நடைபெறும் என திட்ட வட்டமாகத் தெரிவித்து விட்டனர் முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 75க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் கலாஷேத்ரா கல்லூரி வளாகத்திற்கு முன்பு பணியில் ஈடுபட்டனர். அனுமதி மறுக்கப்பட்ட போதும், 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் அமைப்பினர் பதாகைகளை ஏந்தியவாறு கலாக்க்ஷேத்ரா கல்லூரி முன்பு நடை பயணமாக வந்தனர்.
'நீதிபதி கண்ணன் தலைமையிலான சிறப்புக் குழு உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் காவல் துறை கைது செய்யப்பட்டுள்ள ஹரி பத்மனை ஜாமினில் வெளி வராமல் தடுக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். அவர்களைத் தடுத்து நிறுத்திக் காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.