சென்னை: மணலி மாத்தூர் மூன்றாவது மெயின் ரோடு 79-வது இரண்டாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் உடையார் (40). இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும், சந்தியா (10 ), பிரியா லட்சுமி (8), என இரு மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் மாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
உடையார் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடையார் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்து காரணமாக கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி செல்வி மருத்துவமனையில் தங்கி இருந்து கணவரை கவனித்து வருகின்றார்.
இந்நிலையில் குழந்தைகள் வீட்டில் தனியாக உள்ளதால் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டி உடையாரின் தாயார் சந்தான லட்சுமி (67) தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து வந்து கடந்த நான்கு நாட்களாக குழந்தைகளுடன் தங்கி கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மூதாட்டி சந்தான லட்சுமி, சந்தியா, பிரியா லட்சுமி மற்றும் எதிர் வீட்டில் வசிக்கும் செல்வியின் அண்ணன் மகள் பவித்ரா (7) ஆகிய நான்கு பேரும் ஒரே வீட்டில் கதவை பூட்டிக்கொண்டு இரவு தூங்கி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது நள்ளிரவு கொசுவை விரட்ட வைத்திருந்த மின்கொசுவிரட்டி திடீரென தீப்பிடித்து எரிந்து உருகி கீழே இருந்த அட்டைப்பெட்டியில் தீப்பட்டு வீடு முழுதும் தீப்பற்றி புகை மண்டலமாக மாறியது. அனைவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு அனைவரும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.