சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழைக்கு பின்னர் சில குடியிருப்பு பகுதிகளில் குடிநீரோடு கழிவுநீர் கலந்துவிட்டதாக புகார் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை முழுவதும் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை சோதனை செய்ய சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் வார்டு வாரியாக குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தரம் சோதனை
சென்னை முழுவதும் வினியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை சோதனை செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் குடிநீரின் தரம் சோதனை செய்யப்பட்டது.
தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஏதேனும் பகுதியில் குடிநீர் தரம் குறைவாக இருந்தால் அதனை விரைந்து சரி செய்யவும் அதிகாரிகளுக்கு குடிநீர் வழங்கல் வாரியம் உத்தரவிட்டது. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோயினை தவிர்க்க 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுவதுடன், தொற்றுநோய் பரவாமல் இருக்க குடிநீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு 15 லிட்டர் குடிநீரில் ஒரு குளோரின் மாத்திரையை கலந்து இரண்டு மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி குடிநீர் அல்லது கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு 1916 & 04445674567 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் எனவும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:வடசென்னையைப் பாதிக்கும் வடகிழக்குப்பருவமழை; பெரிய அளவில் பாதிப்பு அடைவது ஏன்?