சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பினை உறுதி செய்யும் விதமாக, அவ்வமைப்புகளின் வார்டுகள் ஒவ்வொன்றையும், பகுதிகளாக (Areas) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும், ஏரியா சபையை (Area Sabha) உருவாக்கும் வகையில், 2010 ஆம் ஆண்டு அப்போதைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களில் உரிய வகைமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், அந்த சட்ட திருத்தங்களின் கீழ், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை விதிகள் ஆகியவை வெளியிடப்பட்டன. அரசு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை மேலும் செம்மைப்படுத்துவது தொடர்பாக மேற்கொண்டு வரும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஏரியா சபைகளை அமைத்து நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.
இதன் படி, தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், முதல் முறையாக, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள், ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திலும்,
2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளிலும், மக்கள் தொகையின் அடிப்படையில், மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டையும் நான்கு முதல் பத்து பகுதிகளாகவும், நகராட்சிகளில் நான்கு பகுதிகளாகவும் மற்றும் பேரூராட்சிகளில் மூன்று பகுதிகளாகவும் (Areas) பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஏரியா சபைகளை அமைக்கவும் மற்றும் ஏரியா சபைகளின் கூட்டங்களை நடத்துவது தொடர்பாகவும் தேவையான வகைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.