தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இரண்டு ஆண்டு திமுக ஆட்சி, கள்ளச்சாராய மரணங்களே சாட்சி"- அண்ணாமலை - chennai news

"இரண்டு ஆண்டு திமுக ஆட்சி, கள்ளச்சாராய மரணங்களே சாட்சி" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்

"இரண்டு ஆண்டு திமுக ஆட்சி, கள்ளச்சாராய மரணங்களே சாட்சி"- அண்ணாமலை
"இரண்டு ஆண்டு திமுக ஆட்சி, கள்ளச்சாராய மரணங்களே சாட்சி"- அண்ணாமலை

By

Published : May 15, 2023, 10:25 PM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரடியாக விழுப்புரம் மருத்துவமனையில் உள்ள சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி பணி நீக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நேற்று கள்ளச்சாராயம் அருந்தியதால், பலர் உயிரிழந்தும், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது. டாஸ்மாக் சாராயக் கடைகள் மூலம், ஒரு தலைமுறையையே குடிக்கு அடிமையாக்கியதோடு மட்டுமில்லாமல், இன்று கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த இயலாமல் செயலிழந்து நிற்கிறது திறனற்ற திமுக அரசு. காவல் துறை அதிகாரிகளைப் பலி கிடாவாக்கிவிட்டு, முழுப் பிரச்சனையையும் பூசி மெழுகப் பார்க்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டில், கட்டுப்பாடற்ற சாராய விற்பனையும், கஞ்சா விற்பனையும் பெருகி இருக்கிறது.

இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. சாராய அமைச்சர் செந்தில் பாலாஜியோ, சட்டம் ஒழுங்கு பற்றி கவலை இல்லாமல், சாராய விற்பனையைப் பெருக்குவதில் மட்டும் புதுப்புது திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை அமைச்சகத்தின் இந்த ஆண்டு கொள்கை அறிவிப்பில், தமிழ்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாகக் கள்ளச் சாராய மரணங்கள் நடைபெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, மீண்டும் திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. பத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான பின்னரே, நடவடிக்கை என்ற பெயரில் நாடகமாடுகிறது. தமிழ்நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளி வருகின்றன. இதன் மூலம் இத்தனை நாட்கள், இவர்கள் அனைவரும் அரசுக்குத் தெரிந்தே கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது திமுக அரசு.

அரசுப் பள்ளிகளில், மாணவ மாணவியருக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து தராமல் அலட்சியப்படுத்தி, வெறும் விளம்பர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சட்ட ஒழுங்கையும் காப்பாற்ற இயலாமல், பொதுமக்களின் உயிருடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாகச் செயலிழந்து கிடக்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக, இந்த துயர சம்பவத்திற்குக் காரணமான அனைவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் எங்கும் நடக்காமல் இருக்க, தொடர் கண்காணிப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மத்திய அரசுபோல் மாநில அரசும் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி வழங்க விவசாயிகள் நூதனப் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details