கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரி மூலம் ஆவடி அருகே வெள்ளானூர், 400அடி வெளிவட்ட சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வருவதாக ஆவடி உதவி காவல் இயக்குநர் சத்தியமூர்த்திக்கு இன்று (அக். 16) காலை இரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து அவரின் உத்தரவின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில், காவல் துறையினர் வெள்ளானூர் அணுகு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி, பிடித்து சோதனை நடத்தியுள்ளனர்.
இதில், லாரியில் பிளாஸ்டிக் கோணியில் மூட்டை, மூட்டையாக குட்கா போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியிலிருந்த 2.5 டன் எடையுள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், இது தொடர்பாக லாரி டிரைவர் உள்பட லாரியின் பின்னால் வந்த நான்கு பேரை கைது செய்தனர்.
கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்த 2.5டன் எடையுள்ள குட்கா இதில் லாரி டிரைவர் ராஜஸ்தான் மாநிலம், ரத்தன்புரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் (32) ஆவார். மற்ற நால்வர் சென்னை, சவுகார்பேட்டை, பத்ரீன் தெருவைச் சேர்ந்த மகிபால்சிங்(26), அதே பகுதி, ஆதியப்பா நாயக்கன் தெருவைச் சேர்ந்த மகேந்திரகுமார் (27), ராஜஸ்தான், ஜாலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்சிங் ராஜ்புட் (22), ஆவடியை அடுத்த கோடுவள்ளி, கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துகருப்பசாமி (28) ஆகியோர் ஆவார்கள். கடத்தப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க...கர்ப்பிணி மருமகளை பாலியல் வன்புணர்வு செய்த மாமனார்!