சென்னை: சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், "இளைஞர்களிடையே புகையிலையாக இருந்த போதை பழக்கம் தற்போது கஞ்சா, போதைப் பவுடர், போதை மாத்திரைகளாக உருவெடுத்துள்ளது. இந்த போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்க சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு 438 வழக்குகளில் 836 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2022ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து, 670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1,022 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா மட்டுமல்லாமல் மெத்தபெடமைன், எபிட்ரின், கொகைன் போன்ற பவுடர் வடிவிலான போதைப் பொருட்களின் புழக்கத்தையும் தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 10 மடங்கு அதிகளவு போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 52,612 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நைட்ரோவிட் வலி நிவாரணி மாத்திரைகள், LSD ஸ்டாம்புகள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 7 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022ல் இது இரண்டு மடங்கு உயர்ந்து 12.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. போதைப் பொருட்களின் விற்பனையை மட்டுமல்லாமல், மொத்த விநியோகம் செய்யும் இடங்களையும் கண்டுபிடித்து அழிக்கும் வகையில், போதை கும்பல்கள் மீது பல்வேறு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.