ஹைதராபாத் : கரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் பொதுமுடக்கம், தென்கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவது தொடர்பாக சட்டப்பேரவை தலைவர்கள் கூட்டம், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் என இன்றைய தேசிய மற்றும் மாநில முக்கிய நிகழ்வுகளின் சுருக்கம் இதோ.!
- சட்டப்பேரவை தலைவர்கள் கூட்டம்: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு பெறுவது குறித்து விவாதிக்க சட்டப்பேரவை தலைவர்கள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் நடைபெறுகிறது.
- மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை: தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம், திருநெல்வேலி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜன.8) நடைபெறுகிறது.
- கரோனா தடுப்பூசி முகாம்: சென்னை, சேலம், நாகை, தென்காசி, திருநெல்வேலி எனப் பல்வேறு மாவட்டங்களில் இன்று கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கு தனித்தனியே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகாவில் பொதுமுடக்கம்: கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கர்நாடகாவில் இன்றும் (ஜன.8) நாளையும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இத்தினங்களில் மதுவிற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தென்கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.