தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாச்சாத்தி முதல் டிடிஎஃப் வாசன் வரை.. 2023ல் சென்னை உயர் நீதிமன்றம் சந்தித்த முக்கிய வழக்குகள்..!

Madras High Court: 2023ஆம் ஆண்டு துவக்கம் முதலே சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியது. அப்படியான ஒருசில முக்கிய வழக்குகளையும் அதன் தீர்ப்புகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Madras High Court
வாட்சாத்தி முதல் வாசன் வரை... 2023ல் சென்னை உயர்நீதிமன்றம் கடந்துவந்த பாதை..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 9:16 PM IST

சென்னை: பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் பல்வேறு விவாதங்களாகவும், புதிய மாற்றத்திற்கான பேசு பொருளாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு துவக்கம் முதலே சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டலி முறை நீக்கம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004 ஆம் ஆண்டு கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த காவலர் ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை பார்த்த போது உயர் அதிகாரி தன்னை ஆடர்லி வேலை பார்க்க உத்தரவிட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காவலர்கள் பணிக்குத் தானே தவிர, ஆர்டலி வேலை செய்வதற்கு அல்ல. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த ஆர்டலி முறையைத் தமிழகத்தில் முழுமையாக ஒழிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பால் பல காவலர்கள் காவலர்களாக மட்டும் பணிபுரியும் நிலை உருவானது.

மகளின் ஜீவனாம்சம் தாய்க்கும் சொந்தம்: மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை - சரஸ்வதி தம்பதி 1991ல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 2014ம் ஆண்டு ஜீவனாம்சம் கேட்டு சரஸ்வதி தொடர்ந்த வழக்கில் மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாயை வழங்க 2021ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், 2021ஆம் ஆண்டு மரணமடைந்த சரஸ்வதியின், ஜீவனாம்சத்தைக் கேட்டு அவரது தாய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்து வாரிசுரிமை சட்டத்தின் படி குழந்தைகள் யாரும் இல்லாத நிலையில் தாய்க்கும் மகளின் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என தீர்ப்பளித்தது.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த சுவாதியைக் காதலித்ததாக 2015ஆம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பவ இடங்களில் நேரில் ஆய்வு செய்து கோகுல்ராஜின் கொலையை உறுதி செய்து யுவராஜ் உட்பட 10 பேருக்குச் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

மனைவிக்கும் சொத்தில் உரிமை உண்டு: நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய கண்ணையன் என்பவர், வெளிநாட்டில் 1983 முதல் 1994 வரை வேலை செய்து சுயமாகச் சம்பாதித்து அனுப்பிய தொகையில் தனது பெயரில் தனது மனைவி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கும் உரிமை உள்ளது என கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கணவன் சம்பாத்தியம் மூலம் தனது பங்கை வழங்கினால், மனைவி குடும்பத்தை நிர்வகித்து தன் பங்களிப்பை வழங்குவதால், மனைவிக்கும் சொத்தில் சம உரிமை உள்ளது. மனைவிக்கான உரிமையை அங்கீகரிக்க எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என முன்மாதிரியான தீர்ப்பை வழங்கியது.

மைனர் பெண் கருக்கலைப்பு:மைனர்கள் தங்களுக்கு இடையே சம்மதத்துடன் உடலுறவு கொள்வதன் மூலம் ஏற்படும் கருவைக் கலைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 18 வயதுக்குக் குறைவான மைனர் பெண்ணுக்கு ஏற்படும் கருவைக் கலைக்க, மைனர் தந்தையின் பெயரை மருத்துவ அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தாமல் கருக்கலைப்பு செய்யலாம் என உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி, கற்பழிப்புக்கு ஆளான மைனர் பெண்ணுக்கு இரண்டு விரல் பரிசோதனை மற்றும் யோனி பரிசோதனை ஆகிய இரண்டும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பால் மைனர் பெண்களுக்கு ஏற்படும் தேவையற்ற கர்ப்பத்தைக் கலைக்க யாருக்கும் அஞ்சாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வாச்சாத்தி தீர்ப்பு: தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கடந்த 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் குடியிருப்புகளில் விசாரணை என்ற பெயரில் அப்பாவி இளம் பழங்குடியின பெண்களை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

இது குறித்து 1996ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த வழக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்தது.

சிறைத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. 13 ஆண்டுகளாக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களின் வலிகளை இழப்பீடு வழங்குவதால் மட்டுமே தற்போது ஈடுகட்ட முடியும் என கூறி, குற்றவாளிகளின் சிறைத் தண்டனையை உறுதி செய்து, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டது.

சசிகலா அதிமுக நீக்கம் உறுதி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், உறுப்பினர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்? அதன்படி பொதுக்குழுவால் சசிகலா நீக்கப்பட்டது சரி என கூறி, சசிகலாவுக்கும் இனி அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உத்தரவிட்டது.

நடிகை ஜெயப்பிரதாவுக்கு சிறை:தனது திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் நவம்பர் 1991 முதல் 2002 வரை 8 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், 2002 முதல் 2005 வரை 1 லட்சத்து 58 ஆயிரமும், 2003ல் வசூலித்த இ.எஸ்.ஐ பணத்தைத் தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தாததால், நடிகை ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாதம் சிறைத் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி ஜாமீன் ரத்து: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத் துறையால் ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்தால், அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்த மாட்டார் என்பதற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது.

தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் சாட்சிகளைக் களைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அமைச்சர்களும் கட்டுப்பட்டவர்களே:திராவிட ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சனாதன ஒழிப்பு மாநாடு நடத்த அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கும் போது, திராவிட ஒழிப்பு மாநாட்டு நடத்தவும் உரிமை உள்ளது.

பலரின் நம்பிக்கையாக உள்ள சனாதனத்தை விமர்சனம் செய்து மாநாடு நடத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தமிழகக் காவல்துறை தனது கடமையைச் செய்யத் தவறி விட்டது.

காவல்துறை நடவடிக்கை என்பது அமைச்சர்களுக்கு ஒரு சட்டமும், சாமானியனுக்கு ஒரு சட்டமும் இங்கே வகுக்கப்படவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர்களுக்குக் கடிவாளம் போட்டது.

ஆன்லைன் விளையாட்டு: இளைஞர்களின் தற்கொலை அதிகரித்து வருவதால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திறமைக்கான விளையாட்டுகளான ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விதிமுறைகள் கொண்டு வரும் அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு உள்ளது என தெளிவுபடுத்தியது.

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி சிறை ரத்து: கடந்த 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்த செல்வகணபதி, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்குக் கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் 2014ல் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

டி.டி.எப் வாசன் பைக்கை எரிக்கலாம்: ஸ்ட்ரீட் பைக் ரேஸ்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக யூ-டியூபர் டி.டி.எப் வாசன், செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி டி.டி.எப் வாசன் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதற்காக டி.டி.எப் வாசனுக்கு ஜாமீன் வழங்கிவிட முடியாது. ஜாமீன் வேண்டும் என்றால் முதலில் பைக்கை எரித்து விட்டு, யூடியூப் பக்கத்தை நிரந்தரமாக முடக்கிவிட்டு நீதிமன்றத்தை நாடினால் ஜாமீன் வழங்கப்படும் என உத்தரவிட்டது.

அமைச்சராக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் சட்டமும் நீதிமன்றமும் அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை எடுத்துரைக்கும் விதமாகவே இந்த தீர்ப்புகள் அமைந்துள்ளது.

இதையும் படிங்க:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை எப்படி நடத்த வேண்டும்? உயர் நீதிமன்றக்கிளை கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details