சென்னை:பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, "சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு முன்னோடித் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தனிமனிதனின் தலையாய கடமை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர் மேலாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு பெண் மரியாதையுடன் வாழ்வதற்கு வழிவகை செய்தது திராவிட மாடல். இடை நிற்றல் இல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்வித்திட்டங்களை கல்வியாளர்கள் ஆகச் சிறந்த திட்டங்கள் என வரவேற்கின்றனர்.