தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஜிட்டல் கையெழுத்து தொடர்பான வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை : தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த உத்தரவுகள், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை டிஜிட்டல் கையெழுத்து கொண்டு வெளியிடக் கோரிய வழக்கில் நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கும் உயர் நீதிமன்றப் பதிவாளருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Implementation of digitalisation in state
Implementation of digitalisation in state

By

Published : Aug 31, 2020, 10:59 PM IST

கடந்த 2000ஆம் ஆண்டு மத்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு துறைகள் கணிணிமயமாக்கப்பட்டன. அதன்படி, மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு துறைகள் வெளியிடும் உத்தரவுகளின் நம்பகத்தன்மையைக் உறுதிப்படுத்தும் வகையில் 'டிஜிட்டல் கையெழுத்து' முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசு துறைகளின் உத்தரவுகள், நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றை 'டிஜிட்டல் கையெழுத்து' கொண்டு வெளியிட உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, இன்று (ஆக. 31) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ”தற்போது அரசு வேலை வாய்ப்புக்கு ஆன் லைன் மூலமாக விண்ணப்பங்கள் சமர்பிக்கும்போது, விண்ணப்பதாரரின் கையெழுத்து இல்லாமல் அனுப்பப்படுவதால், முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஆன் லைன் கையெழுத்து முறையை நடைமுறைபடுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அரசு ஆவணங்கள், அரசின் உத்தரவுகளில் நடைபெறும் முறைகேடுகளையும் ஆன் லைன் கையெழுத்து முறை மூலம் தடுக்க முடியும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக இன்னும் நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கும், உயர் நீதிமன்றப் பதிவாளருக்கும் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details