சென்னை:வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி இத்திட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 29 லட்சம் பாட்டில் மதுபானங்கள் விற்கப்பட்டதாகவும், அதில் 18 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விற்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 63 விழுக்காடு பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மற்ற மலைவாசஸ்தலங்களில் 59 விழுக்காடு பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் மட்டும் 18 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களையும் சேர்த்து தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தை ஏன் அமல்படுத்தக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.