சென்னை:கடந்த நவம்பர் மாதம் இறுதியில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல வலுப்பெற்று, முதலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
இந்த நிலையில் இன்று (டிச.3) காலை 5.30 மணியளவில், அந்த கற்றழுத்தத் தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கக்கடலில் 300 கிலோ மீட்டர் புதுச்சேரிக்கு தென்கிழக்காகவும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று டிச.4 ஆம் தேதி (நாளை) காலைக்குள் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, தெற்கு ஆந்திர கடற்கரைக்கு நகர்ந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிச.5 ஆம் தேதி முற்பகலில் ஒரு புயலாகக் கரையை கடக்கும். அப்போது அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டன் கணக்கில் கடலில் கலந்த குப்பைகள்:இந்நிலையில், அடையாறு வழித்தடம் மற்றும் கூவம் வழித்தடத்தில் உபரிநீர் அதிகமாக திறந்துவிடப்பட்டதன் காரணமாக, ஆற்றில் இன்றுவரை தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் அகற்றப்படாமல் இருந்த ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தும் கடலில் கலந்துள்ளன. மேலும், நேற்று முதல் கடற்பரப்பின் மேல் காற்றின் வேகம் அதிகமானதன் காரணமாக, கடல் அலையின் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. இதனால், கடலில் கலந்திருந்த குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தும் டன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.