சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பின் 2ஆம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் 3ஆம் அலை பரவலுக்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மூன்றாம் அலை பரவலுக்கு முன்பு, பல்வேறு தரப்பட்ட மக்களிடம் பரிசோதனைகள் நடத்தி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக, 4ஆம் கட்ட சார் ஆய்வை ஐ.சி.எம்.ஆர் மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தியது.
சென்னையில் ஐம்பத்தொரு வார்டுகளில் உள்ள 204 தெருக்களில் 12,434 பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு தகுதி உடைய 7 ஆயிரத்து 26 பேரிடம் குருதி சார் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் மண்டலம் அடிப்படையில் குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 74.1 விழுக்காடு பேருக்கும், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 82.6 விழுக்காடு பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரிவந்துள்ளது.
வார்டு அடைப்படையில், குறைந்தபட்சமாக கொளத்தூரில் உள்ள 65ஆவது வார்டில் 67.2 விழுக்காடு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதிகபட்சமாக ஓட்டேரியில் உள்ள 71ஆவது வார்டில் 94 விழுக்காடு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் 24 வார்டுகளில் 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களுக்கும், 21 வார்டுகளில் 70 விழுக்காடு முதல் 80 விழுக்காடு மக்களுக்கும், 6 வார்டுகளில் 70 விழுக்காடுக்கும் குறைவான பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.
வயது அடிப்படையில் 6 முதல் 11 வயது உடையவர்களுக்கு 22.2 விழுக்காடு பேருக்கும் , 12 முதல் 17 வயது உடையவர்களுக்கு 76 விழுக்காடு பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 82.5 விழுக்காடு மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.
மாநகராட்சியில் மொத்தமாக மார்ச் மாதம் நடத்தப்பட்ட குருதி சார் பரிசோதனையில் 49.2 விழுக்காடு மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது. தற்போது நடத்திய ஆய்வில் 78.2 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஆணையர்