சென்னை: தமிழகத்தில் அடுத்த வரும் 5 தினங்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்,"தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த வரும் 5 தினங்களுக்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நாளை(டிச.16) இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 24-26 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது".
இதையும் படிங்க: பாஜக-விற்கு இணங்காத மாநிலங்களைப் பிடிக்க இதுதான் திட்டம்.. ஜம்மு & காஷ்மீர் தீர்ப்பே உதாரணம் - உ.வாசுகி குற்றச்சாட்டு!